PLEASE CLICK HERE TO VIEW IN YOUR LANGUAGE

Friday, July 25, 2014

Chokher Bali /2003/Bengali/ஐஸ்வர்யாராயின் விதவை அவதாரம்!


பீந்திரநாத் தாகூர் எழுதிய கதைக்கு ரிதுபர்னோ கோஷ் திரைக்கதை அமைத்து இயக்கிய படம் இது.  கதையின் காலம் 1902-1905.  பினோதினி என்கிற இளம் விதவையின் கதை.

பினோதினி(ஐவர்யாராய்) என்கிற பிராமணப்பெண் அழகு தேவதை, அறிவு மிக்க பெண், ஆங்கிலம் கற்றவள், இந்தியாவுக்கு காபி அறிமுகமான சமயம் அது - நன்றாக காபி போடத் தெரிந்தவள்.  கைவேலைப்பாடுகள் அறிந்தவள்.  கைமருத்துவம் அறிந்தவள்.  ஆனால் அல்பாயுசில் போய்விட்ட கணவனால் வெண்ணிற சேலை கட்டும் இளம் விதவையானாள்.

ராஜலட்சுமியம்மாவின் மகேந்திரா என்கிற மருத்துவம் படிக்கிற பையனுக்குத்தான் பினோதினியை முதலில் மணம் பேசினார்கள்.  ஆனால் அவனுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லாததால் அது நடக்கவில்லை.  அடுத்து வந்த ஒரு வருடத்தில் என்னென்னமோ நடந்துவிட்டது. பினோதினி மணம் முடித்து விதவையானாள். மகேந்திராவுக்கு ஆசாலதா என்கிற பெண்ணோடு கல்யாணம் ஆனது.  ராஜலட்சுமி கிராமத்துக்கு சென்றபோதுதான் பினோதினியை பார்க்கிறாள்.   பெண்கள் காபி குடிப்பது தவறாகக் கருதப்பட்ட காலம்.  அப்போது பினோதினி காபி தயாரித்து தருகிறாள்.  கதவை சாத்தி தாழ் போட்டுவிட்டே காபி குடிக்கிறார்கள்.  அந்த காபி சுவையிலும்,  பினோதினியின் கைமருத்துவமும பிடித்துப் போக பினோதினியை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறாள்.

அங்கே ஆஷாவும் அவளும் இணைபிரியா  தோழிகளாகிவிடுகிறார்கள்.   வீட்டில் இருக்கும்போது யாருமே ஜாக்கெட் அணியும் பழக்கமில்லை அந்தவீட்டில்.  அசட்டுப் பெண் ஆஷாவுக்கு ஆங்கிலம் முதல் ஆலிங்கனம் வரை எல்லாம் கற்றுக்கொடுக்கிறாள்.  ராஜலட்சுமியம்மாவுக்கு காபி தயாரித்து யாருக்கும் தெரியாமல் கொடுப்பதுமே அவள் வேலை.

அந்த வீட்டின் இன்னொரு பிள்ளை (தத்துப்பிள்ளை) பிஹாரி, அவனும் டாக்டருக்கு  மகேந்திராவோடு படிக்கிறான்.  பிநோதினிக்கு பீகாரியின் மீது ஒரு அன்பு இருந்தபோதிலும் மகேந்திராவின் வலையில் வீழ்கிறாள்.  தன்னை இழக்கிறாள்.  இது ஆஷாவுக்கு தெரியவந்து அதிர்ச்சியாகி காசிக்கு சென்றுவிடுகிறாள்.

இதனால் மனம் உடைந்து வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் பினோதினி.  பீகாரியிடம் தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள்.  அவன் மறுக்கவே தன்னுடைய கிராமத்துக்கே செல்கிறாள்.  அங்கே மகேந்திரா அவளை தேடி வருகிறான்.  ஆனால் பினோதினி தன்னுடைய காதல் பிஹாரி மீதுதான் என்று சொல்லி அவனை தவிர்க்கிறாள்.  ஆஷாவைத் தேடி காசிக்கு அழைத்துச் செல்ல சொல்கிறாள்.  இருவரும் காசிக்கு செல்கிறார்கள்.

ஆஷாவை கண்டுபிடித்தார்களா? பினோதினி பீகாரியோடு இணைந்தாளா? என்பதே மீதிக் கதை.  ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மையில் வருகிற ஒரு  பஞ்சாயத்தைப் போன்ற கதைதான் இதுவும்.  ஆனாலும் கொஞ்சம் புனிதத்தன்மை கூடிவிடுவதால் காவியம் ஆகிறது.


முதலில் ஐஸ்வர்யாராயின் நடிப்பை சொல்லியே ஆகவேண்டும்.  அந்தக் கண்களில் எவ்வளவு உணர்ச்சிகளைத்தான் அடைத்து வைத்திருக்கிறார்.   அந்த அப்பழுக்கற்ற முகம் என்னென்ன பாவங்களைத் தருகிறது.  அந்த பாத்திரத்துக்கு ஒரு புதிய அர்த்தத்தை தனது நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார்.    கொஞ்சம் ஏமாந்தாலும் ஒரு பிட்டு படத்தின் கதையைப் போல ஆகிவிடும் ஆபத்து இந்தக் கதையில் இருக்கிறது.  ஆனால் தனது நடிப்பின் மூலம் அதை தகர்த்தெறிகிறார்.  வேறெந்தப் படத்திலும் இந்த அளவுக்கு நடித்திருப்பதாய் தெரியவில்லை.  இந்தப் படத்துக்காக சிறந்த நடிகை அவார்டை பெற்றிருக்கிறார்.

2004ம் வருடத்தின் சிறந்த படம் என்று நேஷனல் அவார்ட் பெற்றிருக்கிறது.  பல உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.

கலை இயக்குனர் INDRANIL GHOSH.  1900 காலத்தை அப்படியே கண்முன் விரிக்கிறார்.  அதற்க்கு அவர் எடுத்திருக்கும் PROPERTIES அபாரமானவை.  விளக்குகள், நகைபெட்டிகள், குதிரை வண்டி, ஓவியங்கள், என்று மெனக்கெட்டிருக்கிறார்.  அவருடைய உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

ஒளிப்பதிவு AVEEK MUHARJI -  இது மாதிரியான பீரியட் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை அற்புதமாக செய்திருக்கிறார்.  காசியின் உண்மையான முகம் இல்லாமல் அதை அழகாக காட்டியதுக்கு அவரின் காமிராவுக்கு நன்றி சொல்லவேண்டும்.

டைட்டில் போடும்போது கொஞ்ச நேர கதையை நகர்த்த காமிராவை மாடிப்படியின் அருகே டாப் ஆங்கலில் மாட்டிவிட்டு நடப்பதை காட்டும்  ரிதுபர்னோ கோஷ் என்னும் இந்தப் படத்தின் இயக்குனரின்   புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது.  பல இடங்களில் விரசமாகிவிடக்கூடிய பல காட்சிகளை கையாண்டவிதம் திரை நுணுக்கங்களை கற்றுத்தருகிறது.  கையில் ஏற்பட்ட சின்ன வெட்டுக்காயத்துக்கு ஆஸ்பத்திரி போகும் அந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம். கோஷ் போனவருடம்தான் இறந்தார்.  அவர் தன்னை ஓப்பனாக ஒரு ஹோம்செக்ஸ் என்று தைரியமாக கூறிக்கொண்டவர். கோஷ் ஒரு திருநங்கை வாழ்க்கையை தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்ததாக சொல்வார்கள்.

CHOKHAR BALI என்றால் கண்ணில் உறுத்தும் மணல் என்று அர்த்தம். பெயரைப்போலவே படமும் கவிதையாய் இருக்கும்.  பாருங்கள்  உங்களுக்கும் பிடித்துப்போகும்-தாகூரை, ஒளிப்பதிவை, இசையை, ரிதுபர்னோ கோஷை,  ஆஷாவை,  பீகாரியை,  பினோதினியை....அழகு கொஞ்சும் ஐஸ்வர்யாராயை...!

 

Wednesday, July 16, 2014

GOAL (2005) - ஒற்றை கோலில் ஹீரோவான கதை.




லகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிறு அன்று நடந்தது.  எல்லா ஆட்டங்களின் லைவ் பார்க்கவில்லைஎன்றாலும் சில முக்கியமான ஆட்டங்களின் லைவ் நான் பார்த்துவிடுவது உண்டு.  சரியாக இரண்டரை மணிக்கு அலாரம் வைத்து படுத்துவிட்டு அலாரம் அடித்தவுடன் எழுந்து  நானும் என் மகன் நவயுகன்  இருவரும் கொட்டகொட்ட பார்ப்போம்.  சனியன்று இரவு பிரேசில்-நெதர்லாந்து ஆட்டத்தை பார்த்திருந்தோம்.

இறுதிப் போட்டி ஞாயிறு அன்று இரவு 12:30 மணிக்கே ஆட்டம் ஆரம்பம்.  யுகன் எழுப்பிவிடுங்கள் என்று சொல்லி படுத்துவிட்டான்.  ஆட்டம் ஆரம்பிக்கும்வரை என்ன செய்வது?  சரி ஒரு படம் பார்க்கலாம் என்று ஹார்ட் டிஸ்கை திறந்தபோது GOAL - THE DREAM BEGINS  என்கிற இந்தப் படம் கண்ணில் பட்டது.  இன்றைய தினத்துக்கு மிகவும் பொருத்தமான படம் - பார்த்துவிடுவோம் என்று பார்க்க ஆரம்பித்தேன்.

SANDIAGO MUNEZ எனும் இளைஞனின் கதை இது.  வறுமை ஒன்றையே சொத்தாக கொண்ட இவன் ஒரு கால்பந்து பைத்தியம்.  அப்பாவின் தோட்ட வேலைகளுக்கு அவ்வப்போது உதவி செய்தும், ஒரு சைனீஸ் உணவகத்தில் பகுதிநேரமாக வேலை செய்துவரும் இவனின் மெயின் வேலை சளைக்காமல் கால்பந்து விளையாடுவது.  இவனது அணியில் இவன்தான் கதாநாயகன்.  ஆனால் வீட்டின் வறுமை இவனை மேலே விடாமல் கீழேயே அழுத்துகிறது.  இவனது அப்பாவுக்கோ இவனின் கால்பந்து மோகம் கொஞ்சம் கூட  பிடிப்பதில்லை.  அவனின் ஒரே ஆறுதல் அவனுக்கு சப்போர்ட் பண்ணும் அவனது பாட்டி மட்டுமே.  

முனீஸ் ஒருநாள் நியுகாசல் யுனைடேட் (NEWCASTLE  UNITED) அணியின் முன்னாள் பிளேயர் GLEN RAY-ன் கண்களில் படுகிறான்.  அவர் தான் விளையாடிய அணியில் சேர்த்துவிடுகிறேன் இங்கிலாந்து வந்துவிடு என்கிறார்.  இங்கிலாந்து போவதற்கோ அவனிடம் இருப்பது ஷூவுக்குள் சேர்த்து வைத்திருக்கும் சொற்ப பணம் மட்டும்தான்.  இருந்தபோதிலும் அவனது அப்பா அனுமதிக்க போவதில்லை.  குழப்பத்தில் இருக்கும் முனீஸ் பாட்டியிடம் சொல்ல 'யோசிக்கவே செய்யாதே.. உடனே கிளம்பு' என்கிறாள்.
ஆனால் ஷூவுக்குள் இருந்த பணத்தை அப்பா எடுத்து கார் ரிப்பேருக்கு கொடுத்துவிடுகிறார்.  மனம் தளராமல் நகைகளை விற்று பாட்டி கொடுத்த கொஞ்சம் பணத்தை வைத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து இங்கிலாந்து செல்கிறான்.

அவன் ஒரு ஆஸ்துமா நோயாளி,  இதை மறைத்து,  அணியில் இருக்கும் சீனியர்களின் ஈகோவை வென்று, புது இடத்தின் அந்நியத் தன்மையை வென்று, அப்பாவின் மரணத்துக்கு கூட செல்ல முடியாமல் கடுமையாக போராடி அணியில் இணைகிறான். அதற்குள் அவனுக்கு வரும் இடையூறுகள் அதை அவன் வெல்லும் ஒவ்வொரு கட்டமும் சுவராஸ்யம் நிறைந்தது.

தற்குள் ஜெர்மனி-அர்ஜென்டினா இறுதி ஆட்டம் தொடங்கிவிட படத்தையும் ஆட்டத்தையும் விட்டுவிட்டு  பார்த்துக்கொண்டிருந்தேன்.  படமும் சுவராஸ்யமாக போய்க்கொண்டிருந்தது.   ஆட்டமும் அப்படியே திரில் குறையாமல் இரு அணிகளும் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் ஒரு கோல் கூட போடாமல் விளையாடிக்கொண்டிருந்தனர்.
முநீஸ்

கோட்சே


டத்தின் இறுதிக்காட்சி.  எப்படியோ தக்கிமுக்கி தன்னுடைய பெர்பார்மான்ஸ் மூலம் A அணியில் இடம்பிடித்து விடுகிறான், அதுவும் மாற்றுவீரராக(SUBSTITUTE).  அது மிக முக்கியமான ஆட்டம்.  அந்த ஆட்டத்தில் ஜெயித்தால்தான் அடுத்து நடக்க போகிற சாம்பியன்ஸ் லீகில் இந்த அணி கலந்து கொள்ள முடியும்.  எதிரணி HALFTIME-க்குள்ளேயே இரண்டு கோல்கள் அடித்து முன்னிலையில் இருக்கிறது.  வெளியே இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனை உள்ளே இறக்கிவிடுகிறார் பயிற்சியாளர்.  முநீஸ்  இறங்கியதும் கடைசி நிமிடத்தில் இரண்டு கோல்கள அடித்து சமன் செய்கிறான்.  வெல்வதற்கு இன்னும் ஒரு கோல் தேவை. இஞ்சுரி டைம் மட்டுமே உள்ளது.  அப்போது ஒரு FREEKICK  வாய்ப்பு கிடைக்கிறது.  அந்த வாய்ப்பு முனீஸ் வசம வருகிறது.  எல்லோரும் டென்சனுடன் இருக்க முனீஸ் அடிக்கிறான்.  பந்து கோலியை ஏமாற்றி வலையில் விழுகிறது.  அந்த கோல் அவனது எதிர்காலத்தை உறுதி செய்கிறது.  அந்த கோல் உலகத்தை திரும்பிப்பார்க்க வைக்கிறது.  அந்த கோலை இறந்துபோன அவனது அப்பாவுக்கு சமர்ப்பிக்கிறான்.  படம் இங்கு நிறைவடைகிறது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு டிவியை பார்க்கிறேன்.  அங்கு அனல் தெறிக்கும் ஆட்டம் நடைபெற்றுகொண்டிருக்கிறது.  புல் டைம் முடிந்து யாரும் கோல் போடாமல் எக்ஸ்ட்ரா டைம் ஓடிக்கொண்டிருக்கிறது.  இப்போது ஜெர்மனி அணியில் ஒரு மாற்றம் செய்கிறார்கள்.  முல்லர் வெளியே வர அதுவரை களம் இறங்காமல் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மரியா கோட்சே என்கிற SUBSTITUTE-ஐ களம் இறக்குகிறார் பயிற்சியாளர்.  அவர் இறங்கி கொஞ்ச நேரத்தில் 113வது நிமிடத்தில் அந்த அதிசயம் நடந்தது.  தன் சக நண்பன் ஆண்ட்ரே கொடுத்த பாசில் பந்தை நெஞ்சில் வாங்கிய கோட்சே அதை காலுக்கு நகர்த்தி கொல்போஸ்டின் சைடில் இருந்து பலமாக உதைக்க பந்து அர்ஜென்டினா கீப்பர் ரோமரியொவை ஏமாற்றி உள்ளே சென்றது.  அந்த நிமிடத்தில் கோட்சே என்கிற அந்த மாற்றுவீரன், தன்னுடைய 22 வயதில் ஹீரோவானான்.  உலகக்கோப்பை வரலாற்றில் மாற்றுவீரரக வந்து வெற்றி கோலை அடித்த ஒரே ஒருவன் என்கின்ற சாதனை அவன் பக்கம் இப்போது.

முநீசும், கோட்சேவும் எனக்கு திரையில் ஒன்றாகவே தெரிந்தார்கள்.  ஒற்றை உதையில் உலகத்தை அளந்தவனாகவே தெரிந்தார்கள்.  இதற்கு முன்பு பல கோல்கள் அடித்திருப்பினும் இப்போது உதைத்த அந்த ஒற்றை கோலில் தனது துயரம், தான் பட்ட கஷ்டம அத்தனையையும் சுக்குநூறாக்கி விட்டிருந்தார்கள்.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் வந்திருப்பதாக சொன்னார்கள். தேடிக்கொண்டிருக்கிறேன் பார்க்க.

இந்தப் படத்தின் சிறப்பு, இதில் நடித்திருக்கும் பிளேயர்ஸ் எல்லோருமே நிஜ ஆட்டக்கரர்களே.  நிஜமான ஒரு ஆட்டத்தை  நடத்தி அதை அப்படியே படம் பிடித்திருக்கிறார்கள்.   முனீஸ் ஆக நடித்திருக்கும் Kuno Becker , அற்புதமான நடிகன்.  இது பார்க்க வேண்டிய படமே.

 

Friday, July 4, 2014

7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.

  


கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று.  அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும்.  இந்தக் கருத்தை அடிப்படையாகக்கொண்டு  எடுத்தபடமே இந்த 7 BOXES என்கிற பராகுவேப் படம். ஸ்பானிய மொழியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் பரவலாக பேசப்பட்டு வசூலை வாரிக்குவித்த படம்.  இதன் திரைக்கதை படத்தின் ஆரம்பம் முதலே பர பரவென்று பற்றி எரிந்து க்ளைமேக்ஸ் வரை கொஞ்சமும் சூடு குறையாமல் அமைக்கப்பட்ட சிறந்த திரைக்கதை கொண்ட படங்களில் இதுவும் ஒன்று.

பராகுவேயின் அச்சினான் நகரத்தில் உள்ள சூபர்மார்க்கட்டே படத்தின் பின்புலம்.  அங்கு மூன்று சக்கர தள்ளுவண்டியில் பொருட்கள் டெலிவரி செய்யும் விக்டர் என்பவனே கதாநாயகன்.  அவனுக்கு என்றாவது ஒரு நாள் தனது முகமும் டிவியில் வரும்படி பெரிய நடிகனாக வேண்டும்  என்பது ஆசை.  அதற்கு வீடியோ எடுக்கக்கூடிய ஒரு செகண்ட்ஹாண்ட் செல்போனாவது வாங்கியாகவேண்டும்.  அதற்கு ஐம்பது டாலராவது வேண்டும்.  தனது சகோதரியின் நண்பி தனது பிரசவ செலவுக்காக தனது பாய்பிரண்ட் கொடுத்திருந்த விலை உயர்ந்த செல்போனை வாங்க முடிவெடுக்கிறான்.  அதற்கு தோதாக அவனுக்கு ஒரு டெலிவரி வேலை கிடைக்கிறது.

அந்த மார்க்கெட்டில் இருக்கிற ஒரு கசப்புகடைக்காரன் வழக்கமாக வருகிற ஒரு மொட்டை டெலிவரி ஆள் வராததால்   விக்டருக்கு அந்த வாய்ப்பபை வழங்குகிறான்.  ஏழு பெட்டிகளை எடுத்துச் செல்லவேண்டும்.  எங்கு டெலிவரி செய்யவேண்டும் என்பதை பின்னர் சொல்வான்.  அவர்கள் பேசிக்கொள்ள ஒரு செல்போனும் தரப்படுகிறது.  கூலியாக நூறு டாலர் நோட்டு பாதியாக கிழிக்கப்பட்டு ஆளுக்கொரு  பாதியை வைத்துக்கொள்கிறார்கள்.  டெலிவரி செய்தவுடன் மீதியை தருவதாக சொல்கிறான்.  அவனும் அதை நம்பி வண்டியை உருட்டிக்கொண்டு மார்க்கட்டுக்குள் செல்கிறான்.  அதற்குள் அவனது காதலி லிசியும் அவனோடு சேர்ந்துகொள்ள கொஞ்ச நேரத்தில் போலீஸ் பரிசோதனையில் மாட்டிக்கொள்கிறான்.

அதற்குள் ரெகுலர்  மொட்டை டெலிவரி  ஆள் வந்துவிட அவனையே அந்த வண்டியை தேடிப்பிடித்து சரக்கை வாங்கிக்கொள்ளுமாறு க.கடை ஆள் சொல்லிவிடுகிறான்.      வண்டியை தேடி போகும் மொட்டை, வண்டி போலீஸ் பரிசோதனையில்  இருப்பதைப் பார்த்து செய்தியை க.கடை ஆளிடம் வந்து சொல்ல அவனும் அவன் முதலாளியும் பதறுகிறார்கள்.  அவர்கள் பேசுவதை அரைகுறையாக கேட்ட மொட்டையனுக்கு அந்த ஏழு பெட்டிகளில் 250000 டாலர்கள் இருப்பது தெரிகிறது.  உடனே அவன் ஒரு க்ரூப் சேர்த்துக்கொண்டு அந்த வண்டியை தேடுகிறான்.


போலீசிடமிருந்து சமயோசிதமாக தப்பித்த விக்டர் வண்டியை தள்ளிக்கொண்டு போகும்போது ஒரு பெட்டியை ஒரு திருடன் திருடிக்கொண்டு ஓடிவிடுகிறான்.  மொட்டையனும் அவன் ஆட்களும் இவர்களை துரத்துகிறார்கள்.  அப்படி என்னதான் அந்த பெட்டிக்குள் இருக்கிறது என்று விக்டர் ஒதுக்குபுறமாக ஒரு பழைய அறையில் வண்டியை நிறுத்தி திறந்து பார்க்கிறான்.  அதில் ஒரு பெண்ணின் தலை மட்டும் இருக்கிறது.  ஏழு பெட்டிகளிலும் அந்த உடலின் பாகங்கள் இருப்பது தெரிந்து தலை தெறிக்க ஓடுகிறான்.  ஓடி ஒரு வீடியோ ஷாப்பில்  நிற்கிறான்.  அங்கு இருக்கும் டிவிக்களில்  அந்த கடையின் காமிராவில் பட்டு அவன் முகம் தெரிகிறது.  அவனது முகம்  டிவியில் வரவேண்டும் என்கிற கனவு நினைவு வர  திரும்பி வண்டியை நிறுத்திய இடத்தில் வந்து பார்த்தால் அந்த இடம் தீ பிடித்து எரிந்துகொண்டு இருக்கிறது.

அப்போது செல்போனில் கசாப்புகடைக்கரன் சரக்கை கொண்டு வருமாறு சொல்ல வேறு வழியில்லாமல் வெறும் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு செல்கிறான்.  இதற்குள் கசாப்பு கடைக்காரனின் ஆட்கள்  துரத்த வெறும் பெட்டியை அவர்களிடம் விட்டுவிட்டு தப்பிக்கிறான்.   ஆனால் அவர்களில் ஒருவனை சுட்டு ஒருவனை போலீஸ் பிடித்துவிடுகிறது.

இப்போது அந்த பிணத்தின் கதையை கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.  ஒரு துணிக்கடை வைத்திருக்கும் பேராசை பிடித்த ஜார்ஜ், அவனுக்கு ஒரு பணக்கார மனைவி. ஜார்ஜ் மாமனாரிடம் இருந்து பணத்தை அபகரிக்க அவனது நண்பனை நாடுகிறான். அவன்தான்  கசப்பு கடைக்காரன்.  அவன் தனது கடை ஊழியன் டாரியாவின் துணையோடு ஜார்ஜின் மனைவியை கடத்தி தனது வீட்டில் வைக்கிறான்.  ஜார்ஜின் மாமனாரிடம் டீல் பேசி  250000 டாலர்கள் பெறுகிறார்கள்.

கடத்தல் செய்யும் இந்த மூவருக்குள் ஒரு கோட்வேர்ட் இருக்கிறது.  தக்காளி எனில் ஜார்ஜின் மனைவி, முட்டைக்கோஸ் எனில் பணம்.  முட்டைக்கோஸ் வந்துவிட  ஜார்ஜ் போன் செய்து டாரியாவிடம் கோட்வேர்ட்ல் தக்காளியை 7 பாகமாக பிரித்து மார்கெட்டுக்கு அனுப்பிவிடு என்று தவறுதலாக சொல்லிவிடுகிறான்.  அவனும் தக்காளி போன்ற ஜார்ஜின் மனைவியை ஏழு கூறாக போட்டு ஏழு பெட்டிகளில் அடைத்துவிடுகிறான்.  அதைத்தான் விக்டரிடம் கொடுத்து மார்க்கட்டுக்குள் அனுப்புகிறான்.

இப்போது விகடரிடம் அந்த நிஜ ஏழு பெட்டிகளும் காதலி லிசி உதவியால் மீண்டும் அவன் கைக்கே கிடைக்கிறது.  ஆனால் மொடையனும் அவனது ஆட்களும் இவனை துரத்த விக்டர் ஓடுகிறான்.  இதற்கிடையில் போலீசும் விஷயம் தெரிந்து இவனை துரத்துகிறார்கள்.  கசப்பு கடைக்காரனும் டாரியாவும்  இவனை துரத்துகிறார்கள்.  அந்த பிணமும் ஏழு பெட்டிகளும் என்னவாயின என்பதுதான் மீதிக்கதை.

ஒரு கதையை சுவராசியப் படுத்த எடிட்டிங் எவ்வளவு உதவுகிறது என்பதை இந்தப் படத்தை வைத்து பாடம் நடத்தலாம்.  நான் லீனியராக கதையை சொல்வதால் படத்தின் பரபரப்பு கூடிக்கொண்டே போகிறது.
பெட்டியில் என்ன இருக்கிறது என்பதை REVEAL செய்யும் காட்சியும் அதன் கட்ஸுகளும் அட்டகாசம்.  அதே போல டாரியாவின் வீடும் அங்கு கடத்தப்பட்ட பெண் தப்பிப்பதை சொல்லும் காட்சியும் அந்த  காட்சி எடிட்டிங்கும் டாப் கிளாஸ்.

படத்தின் லொகேஷன் ஒரு படத்திற்கு எவ்வளவு வலு சேர்க்கும் என்பது இப்படம் ஒரு சிறந்த உதாரணம்.     ஒரு சூப்பர் மார்க்கெட்டின் நான்கு தெருக்களே படத்தின் லொக்கேஷன்.   டெலிவரி போர்ட்டர் என்கிற தொழிலும் இங்கு சுவராசியப் படுத்துகிறது.  அவன் டெலிவரி செய்வது ஒரு பிணம் என்பதே கதையின் மையக் கரு.  இதுவே படத்தை கட்டி இழுக்கிறது.
                               
படத்தின் ஒவ்வொரு கேரக்டரின் பலவீனங்களே கதையை பரபரப்பாக்குகிறது. விக்டர் செல்போன் ஆசை உள்ள இளந்தாரி.  அவன் முகம் எப்படியாவது டிவியில் தெரியவேண்டும் என்கிற வேட்கையே பிணம் கடத்தும் வேலையை துணிந்து செய்யவைக்கிறது.  பணத்தை கிழித்தால் அது செல்லாது என்கிற சிறிய அறிவு கூட இல்லாத இளங்கன்று அவன்.  அவ்வப்போது அவனை வழிநடத்தும் அவன் காதலி லிசி.

குழந்தைக்கு மருந்து வாங்க கூட காசு இல்லாத மொட்டையன்.  அதற்காகவே விக்டரை துரத்தவேண்டிய கட்டாயம் அவனுக்கு வருகிறது.  பிரசவ செலவுக்காக செல்போனை விற்கும் கர்ப்பிணிப் பெண்.  அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் இளம்பெண் விக்டரின் சகோதரி.  அவள் வேலை செய்யும் ஓட்டல் முதலாளியின் கண்டிப்பு,  முதலாளியின் மகனின் CALF LOVE.  அவனோடு டாரியாவின் வீட்டை கண்டுபிடித்து போலீசிடம் சிக்கி தம்பியை வெகுளித்தனமாக காட்டிகொடுப்பது என்று அத்தனை அழகாக முடிச்சுகள் மேல் முடிச்சுகளாக போடுகிறார்கள்.

இந்தப் படத்தின் இரட்டை இயக்குனர்கள்- Juan Carlos Maneglia and Tana Schémbori இருவரும் தம்பதிகள்.  அந்த மார்க்கட்டைப் பற்றி நன்றாக ஸ்டடி செய்து இப்படத்தை நேடிவிட்டியுடன் எடுத்திருக்கும் விதத்தை கண்டிப்பாக பாராட்டவேண்டும்.  இவர்களும், ஒளிப்பதிவாளர் குழுவும், கூட்டம் அம்மும் சூப்பர் மார்க்கட்டுக்குள் படம் எடுத்திருக்கும் இவர்களின் உழைப்பை பாராட்டியே ஆகவேண்டும்.

மிகவும் குறைவான படங்களே அதுவும் கலைப்படங்களே எடுக்கும் பராகுவேயின் அரிதான கமர்சியல் படம் இது.  மிகவும் வசூலை குவித்த படம்.  கமர்சியல் டிரென்ட் செட்டை உருவாக்கிய படம், வெளிநாடுகளில் பராகுவேயின் மதிப்பை உயர்த்திய படம் என்று பல சிறப்புகளை பெற்று இந்தப் படம் சிறந்து விளங்குகிறது.  கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டிய படம் இது.